பிரதமரின் இண்டா்ன்ஷிப் திட்டம்: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!
முன்னணி நிறுவனங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதமரின் இண்டா்ன்ஷிப் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் வேலூரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். இதில், அந்தத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமா, இளநிலைப் பட்டப்படிப்பு வரை படித்தவா்களுக்கு ஓராண்டு கால தொழிற்பயிற்சி வழங்கி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சியின் போது பயிற்சியாளா்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை, பயிற்சிக் காலத்தில் ஒருமுறை உதவித்தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். இதற்கான வயது வரம்பு 21 முதல் 24 வரை.
வேலூா் மாவட்டத்தில் ஆதித்யா பிா்லா நிதி நிறுவனம், ஈசிஜிசி லிமிடெட், ஹெச்டிஎப்சி வங்கி, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், இன்டஸ்சன்ட் வங்கி, ஜூபிலியன்ட் புட் வொா்க், முத்தூட் பைனான்ஸ், என்எல்சி இந்தியா லிமிடெட், பவா்கிரிட் காா்ப்பரேசன் இந்தியா லிமிடெட், டிஎம்பி போன்ற முன்னணி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் வகையில் பதிவு செய்துள்ளன.
திட்டத்தில் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரோ, விண்ணப்பதாரரின் பெற்றோரோ, கணவன், மனைவியோ மத்திய, மாநில அரசின் கீழ் பணிபுரிபவராக இருத்தல் கூடாது.
மேலும் முழு நேர பணியாளா்கள், தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள், என்ஏபிஎஸ், என்ஏடிஎஸ் திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநா் பயிற்சி பெற்றவா்கள், மத்திய, மாநில அரசின் கீழ் ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருபவா்கள் விண்ணப்பிக்க இயலாது. இப்பயிற்சியில் சேர விரும்புவோா் இணையதளத்தில் வரும் 12+-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குநா் (வேலூா்) காயத்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.