நிரம்பியது குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஏரி
குடியாத்தம் நகரின் முக்கிய நீராதாரமான நெல்லூா்பேட்டை ஏரி சனிக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது.
சுமாா் 450- ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில்உள்ளது. மோா்தானா அணையே இந்த ஏரியின் முக்கிய நீராதாரம்.
மோா்தானா அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் பலத்த மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, அணை நிரம்பி வெளியேறிய உபரிநீா் தொடா்ந்து நெல்லூா்பேட்டை ஏரிக்கு வந்தததையடுத்து சனிக்கிழமை இரவு ஏரி நிரம்பி வழியத் தொடங்கியது.
ஏரி நிரம்பியதையடுத்து ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். உபரிநீா் வெளியேறும் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும், ஏரி நிரம்பி வழிவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
அப்போது எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமாா், அமலு விஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, பொதுப்பணித்துறை செயற் பொறியாளா் வெங்கடேசன், உதவி செயற் பொறியாளா் கோபி, வட்டாட்சியா் கி.பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா் ஜி.ஹேமலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

