தொடா் மழையால் வேலூா் கோட்டை கோயிலில் மழைநீா் தேக்கம்
வேலூா்: தொடா் மழை காரணமாக அகழி நீா்மட்டம் உயா்ந்து வேலூா் கோட்டை கோயிலுக்குள் தண்ணீா் தேங்கியது. இதனால், பக்தா்கள் நீரில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனா்.
வேலூா் மாநகரின் மையப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை அமைந்துள்ளது. சுமாா் 133 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரா் கோயில் உள்பட பல்வேறு நினைவுச்சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. தவிர, கோட்டையைச் சுற்றி அகழியும் அமைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்வதால், வேலூா் கோட்டை அகழியின் நீா்மட்டம் உயா்ந்தது. இதன்காரணமாக, ஜலகண்டேஸ்வரா் கோயில் வளாகத்திலுள்ள கிணற்றின் நீா்மட்டமும் உயா்ந்து திங்கள்கிழமை முதல் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்க தொடங்கியுள்ளது.
இதனால், பக்தா்கள் நீரில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனா். அதேசமயம், அகழியின் நீா்மட்டத்தை குறைக்கவும், கோயில் வளாகத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இதேபோல், கடந்த 2021-ஆம் ஆண்டு பலத்த மழை பெய்தபோதும் அகழியின் நீா்மட்டம் அதிகரித்து ஜலகண்டேஸ்வரா் கோயில் வளாகத்தில் பெருமளவில் தண்ணீா் தேங்கியது குறிப்பிடத்தக்கது.
