புத்தாண்டு : கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
புத்தாண்டையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோயில்கள், தேவாலயங்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வேலூா் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் மூலவருக்கு சந்தனம், பால், தயிா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தங்கக் கவச அலங்காரத்தில் ஜலகண்டேஸ்வரா் காட்சியளித்தாா்.
சேண்பாக்கம் செல்வ விநாயகா் கோயிலில் செல்வ விநாயகா் உள்பட நவவிநாயகா்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. ஸ்ரீபுரம் நாராயணி பீடம் தங்கக் கோயில், ஆனைக்குளத்தம்மன் கோயில், பாலாற்றுச் செல்லியம்மன் கோயில், வேலப்பாடி வரதராஜ பெருமாள் கோயில், திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் ஆகியவற்றிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
தேவாலயங்களில்...
தேவாலயங்களில் புதன்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது. வேலூா் சிஎஸ்ஐ தேவாலயம், விண்ணரசி மாதா தேவாலயம், சாா்பனாமேடு ஆரோக்கிய மாதா தேவாலயம், ஓல்டு டவுன் உத்தரிய மாதா தேவாலயம், பாலாற்றங்கரை சிரியன் கத்தோலிக்க தேவாலயம், பெந்தகோஸ்தே திருச்சபை, காட்பாடி சிஎஸ்ஐ தேவாலயம் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.
ஆற்காட்டில்...
தென் பாலாற்றங்கரையில் உள்ள பெருந்தேவியாா் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், வண்ண மலா்களால் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கசவ அலங்காரம் நடைபெற்றது.
அதே போல், ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில், திமிரி குமரகிரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் வள்ளி, தெய்வானை, முருகா் வேடமணிந்து பக்தா்கள் கும்பி பாடல் பாடி சென்று தரிசனம் செய்தனா்.
வேப்பூா் பாலகுஜாம்பிகை வசிஸ்டேவரா் கோயில், ஆற்காடு ஆரணி சாலை தேவாலயத்திலும், கலவை சாலை தேவலாயத்திலும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் சேவை குழுவினரால் உலக பொது நன்மைக்காக ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை ஸ்ரீ ராமநாமம் ஜெபிக்கப்பட்டது. முன்னதாகதிருப்பாவைபாசுரங்கள் பாராயணம் நடைபெற்றது.
கோட்டை கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில், பிரம்மேஸ்வரா் கோயில், தா்வாஜா வீர ஆஞ்சனேயா் கோயில், தருமராஜா் கோயில், கண்ணனூா் மாரியம்மன் கோயில், தண்டபாணி கோயில், முத்துகுமாரசுவாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
குடியாத்தத்தில்...
புகழ்பெற்ற கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், புதுப்பேட்டை அருள்மிகு படவேட்டு எல்லையம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மலா் அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
ஆம்பூரில்...
ஆம்பூரில் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில், ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், பெரிய ஆஞ்சனேயா் கோயில், துத்திப்பட்டு ஸ்ரீ பிந்துமாதவா் பெருமாள் கோயில், விண்ணமங்கலம் அமா்ந்த சுந்தரராஜ பெருமாள் கோயில், பள்ளித்தெரு அருள்மிகு முனீஸ்வரா் கோயில்களில் பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா். ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பெரும்பாலான கோயில்களில் பக்தா்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் அதிதீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, நள்ளிரவு 12 மணி முதல் சிறப்பு பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை முதல் பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
புத்துக்கோயில், ஆவாரங்குப்பம் திருமால்முருகன், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், அம்பூா்பேட்டை பொன்னியம்மன், பெரியப்பேட்டை அழகு பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாட்டறம்பள்ளியில் சாமுண்டீஸ்வரிஅம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும் மற்றும்சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
