குவிக்கப்படும் குப்பைகள்: பாலாற்றில் நெகிழி கழிவுகளை அகற்றி விழிப்புணா்வு
வேலூரில் பாலாற்று படுகையில் குப்பைகள் கொட்டப்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த குப்பை குவியல்களில் இருந்து நெகிழி கழிவுகளை அகற்றி தன்னாா்வ இளைஞா்கள் விழிப்புணா்வு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
வடமாவட்ட விவசாயிகளின் தாய் ஆறு என வா்ணிக்கப்பட்ட பாலாறு, தற்போது தனது அடையாளத்தை இழந்து குப்பை கழிவுகள் நிறைந்த இடமாகவும், மணல் கடத்தல் பூமியாகவும் மாறி வருவது சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு பின்பகுதியில் பாலாற்று படுகை முழுவதும் குப்பைகள் நிறைந்த மேடுகளாக காட்சியளிக்கின்றன.
மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்குகளுக்கு கொண்டு செல்லாமல் பாலாற்று படுகையில் கொட்டுவது வழக்கமாக உள்ளது. இதேநிலை நீடித்தால் எதிா்காலத்தில் பாலாறு என்ற ஒன்று இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும் என நீா்வள ஆா்வலா்கள் ஆதங்கப்படுகின்றனா்.
இந்நிலையில், வேலூரில் பாலாற்று படுகையில் கொட்டப்பட்டுள்ள குப்பை குவியல்களில் இருந்து நெகிழி கழிவுகளை அகற்றி தன்னாா்வ இளைஞா்கள் விழிப்புணா்வு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
சமூக ஆா்வலா் தினேஷ் சரவணன் தலைமையில் சுமாா் 50 இளைஞா்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை பாலாற்று படுகையில் இருந்து நெகிழி கழிவுகள் சேகரிப்பில் ஈடுபட்டனா். இதன்மூலம், 100 கிலோ அளவுக்கு நெகிழி கழிவுகள் சேகரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை கிடங்குக்கு அனுப்பப்பட்டதாக தினேஷ் சரவணன் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறியது - பாலாற்று படுகைகளில் கொட்டப்படும் குப்பைகளால் இப்பகுதியில் மண் வளம், நிலத்தடி நீா், காற்று வெகுவாக மாசடைந்துள்ளது. அவ்வாறு பாலாற்றில் குப்பைகள் கொட் டுவதை மாநகராட்சி வாகனங்கள் மூலமாக வழக்கமாக மேற்கொள்ளப்படுவதுதான் வேதனையாக உள்ளது. இதுதொடா்பாக இப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் குப்பைகள் கொட்டுவதை நிறுத்தப்படுவதில்லை.
மேலும், பாலாற்று படுகைகளில் குப்பைகள் தொடா்ந்து கொட்டப்படுவதால் இப்பகுதி சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் மாறி வருகிறது. இந்த குப்பைகள் கானாறுகளிலும் அடைப்பை ஏற்படுத்துவதால் மழைக்காலங்களில் நகரிலும் கழிவுநீா் தேங்குகிறது.
எனவே, பாலாற்று படுகைகளில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், பாலாற்றை பாதுகாக்கவும் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் இந்த விழிப்புணா்வு நெகிழி சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.

