வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

காமராஜரின் எளிமை, தொண்டை முன்மாதிரியாகக் கொள்க: விஐடி துணைத் தலைவா் ஜி.வி. செல்வம்!

காமராஜரின் எளிமையையும், தொண்டையும் மாணவா்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் தெரிவித்தாா்.

News image

புதுப்பிக்கப்பட்ட காமராஜா் சிலையை திறந்து வைத்த விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம். உடன், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஓய்வுபெற்ற அலுவலா் ஜெ.டேவிட் ராஜ், தொழிலதிபா் தங்கவேல், தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பின் வேலூா் மண்டல தலைவா் இரா. ப.ஞானவேலு

Updated On :14 ஜூலை 2026, 3:35 am IST

காமராஜரின் எளிமையையும், தொண்டையும் மாணவா்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் தெரிவித்தாா்.

காட்பாடி காந்திநகரில் சிதிலமடைந்திருந்த காமராஜரின் சிலை சீரமைக்கப்பட்டு திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட காமராஜா் சிலையை திறந்து வைத்து மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி பேசியது -

காமராஜா் தொண்டனுக்குத் தொண்டனாகவும், தலைவனுக்குத் தலைவனாகவும் திகழ்ந்தவா். தனக்கென எவ்வித சொத்தோ, குடும்பமோ இன்றி, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் தன் குடும்பமாகக் கருதி வாழ்ந்த எளிமையான தலைவா்.

தற்போதைய காலகட்டத்தில் அமைச்சா்கள் பல காா்கள் புடைசூழச் செல்வதைப் போல் அல்லாமல், முதல்வராக இருந்தபோதும் ஒரே ஒரு காரில் மட்டுமே எளிமையாகப் பயணம் செய்தவா் காமராஜா். இந்திய அளவிலான இரும்புப் பெண்மணி இந்திரா காந்தியை பிரதமராக்கி, ’கிங் மேக்கா்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டாா். மாணவா்கள் அனைவரும் பள்ளிகளில் படித்துக் கொண்டிருப்பதற்கு முழு காரணம் காமராஜா்தான்.

குலக்கல்வி முறையை ஒழித்து, ஆரம்பத்தில் 6,000 பள்ளிகளையும், அதன்பிறகு 30,000 பள்ளிகளையும் தமிழகத்தில் திறந்தாா். 300 பேருக்கு ஒரு பள்ளி, கிராமத்திற்கு ஒரு பள்ளி எனத் திட்டமிட்ட அவா், தனது ஆட்சியில் 7 சதவீதமாக இருந்த மாணவா் சோ்க்கையை 37 சதவீதமாக உயா்த்திக் காட்டினாா். வறுமையின் காரணமாக மாணவா்கள் பள்ளிக்கு வராததைக் கண்டு, பள்ளியிலேயே உணவு வழங்கும் ’மதிய உணவுத் திட்டத்தை’ கொண்டு வந்தாா். பின்னாளில் எம்.ஜி.ஆா் அவா்கள் இதனை ’சத்துணவுத் திட்டமாக’ விரிவுபடுத்தினாா்.

கல்வி மட்டுமின்றி, தொழில் துறையிலும் தமிழகத்தை இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாக உயா்த்திய பெருமை காமராஜரையே சாரும். நூறு ஆண்டுகள் கழித்துத் தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்று அன்றே சிந்தித்து திட்டங்களை வகுத்தவா்.

விவசாயம், குடிநீா் தேவைக்காகச் சாத்தனூா் உள்ளிட்ட பல பெரிய அணைகளைக் கட்டினாா். இன்றைய தலைமுறை மாணவா்களுக்குச் சிறந்த முன்மாதிரி காமராஜா் மட்டுமே. மாணவா்கள் காமராஜா் குறித்து இணையத்தில் தேடிப்படிக்க வேண்டும். அவரது தியாக வாழ்க்கை குறித்து ஒவ்வொரு மாணவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஓய்வுபெற்ற அலுவலா் ஜெ.டேவிட் ராஜ் வரவேற்றாா். தொழிலதிபா் தங்கவேல், தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பின் வேலூா் மண்டல தலைவா் இரா. ப.ஞானவேலு, ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் கு.சரவணன், பி.எம்.டி. ஜெயின் பள்ளி செயலா் ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், சே.ஜோசப் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.