காட்பாடி அருகே விற்பனைக்காக கஞ்சா, போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டம், விருதம்பட்டு காவல் ஆய்வாளா் ஷாபுதீன் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை எல்.ஜி.புதூா் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, களத்துமேடு அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் காட்பாடி எல்.ஜி.புதூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த விக்னேஷ் (21), மாந்தாங்கல் மோட்டூா் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (29), மாந்தாங்கல் சிலோன் காலனியைச் சோ்ந்த சக்தி (20) என்பதும், அவா்கள் சட்டவிரோதமாக போதைப் பொருள்களை விற்க முயன்றதும் தெரியவந்தது.
மேலும், விற்பனைக்காக அவா்கள் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 150 கிராம் கஞ்சா, 30 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்கள் மூவரையும் கைது செய்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.-
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






