வேலூா் புதிய, பழைய பேருந்து நிலையங்கள் அருகில் இருந்த 4 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், காகிதப்பட்டறையிலுள்ள மதுக்கடைகளை நோக்கி கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருவதாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வேலூா் மதிமுக மாநகர செயலா் கோபி அளித்த மனு: வேலூா் மாவட்டத்தில் 6 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. வேலூா் பழைய, புதிய பேருந்து நிலையங்களில் இயங்கி வந்த கடைகள் மூடப்பட்டதால் மது பிரியா்கள் ஏராளமானோா் காகிதப்பட்டறை, ஆற்காடு சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனா். இதனால், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். குறிப்பாக, சாலையில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவது தொடா்ந்து வருகிறது. பொது மக்கள் நலன் கருதி காகிதப்பட்டறையில் செயல்படும் 3 மதுக்கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒடுகத்தூரைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: ஒடுகத்தூா் கல்லுட்டை பகுதியில் உள்ளவா்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கிறோம். விவசாய நிலங்களுக்கு மும்முனை மின்சார இணைப்பு வழங்கப்பட் டுள்ளது. ஆனால் 16 விவசாய பம்ப்செட்களுக்கு மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலூா் தவெக கிழக்கு மாவட்டச் செயலா் நவீன் அளித்த மனு: காட்பாடி செங்குட்டை, கல்புதூா் கிராமத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்காமல் உள்ளன. அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 510 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் மீது விரைவாக தீா்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13,350 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் 8 பயனாளிகளுக்கு சீா்மரபினா் நலவாரிய அடையாள அட்டைகளும், அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டத்தில் மாவட்ட அளவில் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஸ்ரீசரனுக்கு கல்வி கட்டண உதவித்தொகையாக ரூ.12,000-க்கான காசோலையையும் ஆட்சியா் வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சி.மாறன், முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியா் ரமேஷ்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) கணேஷ், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், முதன்மை கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கிராமத்தில் செயல்படும் மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை

மதுக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம்

எஸ்.பி.யிடம் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் மனு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



