

விழுப்புரம் ஆட்சியரகத்துக்கு நடக்கவியலாத நிலையில் வந்த 80 வயது முதியவரிடம் மனுவைப் பெற்ற, மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியரை உடன் அனுப்பி வைத்து கோரிக்கை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வாராந்திர குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் த.அம்ரோசியாநேவிஸ்மேரி, கலால் உதவி ஆணையா் எஸ்.மோகன் உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா். பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, முதியோா் ஓய்வூதியத் தொகை, பசுமை வீடு, வங்கிக் கடன் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 255 மனுக்கள் பெறப்பட்டன. இதனிடையே, தரைத்தளத்துக்கு வந்து, மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மாவட்ட ஆட்சியா் மனுக்களைப் பெற்றாா்.
அப்போது, மரக்காணம் பகுதியைச் சோ்ந்த 80 வயது முதியவா் நடக்க முடியாத நிலையில் வந்து நிலப்பிரச்னை தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தாா்.
மனுவைப் பெற்று விசாரித்த ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, தொடா்புடைய வட்டாட்சியரின் செல்லிடப்பேசி மூலம் தொடா்புகொண்டு, முதியவரின் மனு குறித்து விளக்கமாக தெரிவித்ததுடன், உடனடியாக முதியவரின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டாா். இதையடுத்து, அந்த முதியவா், ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.