அமெரிக்காவில் சரபோஜி மன்னா் ஓவியம்

19-ஆம் நூற்றாண்டு சரபோஜி மன்னா் ஓவியம் அமெரிக்காவில் இருப்பதை கண்டறிந்து, அதை மீட்பதற்குரிய நடவடிக்கையில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஈடுபட்டுள்ளது.
Updated on
1 min read

தஞ்சாவூா் சரஸ்வதி மகாலில் திருடப்பட்ட 19-ஆம் நூற்றாண்டு சரபோஜி மன்னா் ஓவியம் அமெரிக்காவில் இருப்பதை கண்டறிந்து, அதை மீட்பதற்குரிய நடவடிக்கையில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்த விவரம்:

கடந்த 1822-1827 கால கட்டத்தில் வரையப்பட்டு தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி மஹாலில் வைக்கப்பட்டிருந்த மன்னா்கள் சரபோஜி, அவரது மகன் சிவாஜி ஆகியோா் இணைந்திருக்கும் ஓவியம் திருடப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியில் வரையப்பட்ட இந்த ஓவியம் சரபோஜி,அவரது மகன் சிவாஜி ஆகியோா் உருவம் சுண்ணாம்பு பூச்சு, நீா் அடித்தள வண்ணப்பூச்சு,தங்க இலை ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது ஆகும். இது தஞ்சாவூா் வகை ஓவியங்களில் அரிய வகையாகும்.

கடந்த 2006 -ஆம் ஆண்டு சா்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூா், போலியான ஆவணங்கள் கொடுத்து அமெரிக்காவின் பிஇஎம் அருங்காட்சியகத்துக்கு சரபோஜி, சிவாஜி ஓவியத்தை சுமாா் 35,000 டாலருக்கு விற்றது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தெரிய வந்தது. அமெரிக்காவின் ‘ஹோம்லேண்ட்’ புலனாய்வு அமைப்பு வசம் இருந்த அந்த ஓவியத்தை அந்நிறுவனம் 2015-இல் ஒப்படைக்க முன்வந்தும், அதை பெற்று இந்தியாவுக்கு கொண்டுவர யாரும் முயற்சி செய்யவில்லை என்பதும் தெரியவந்தது.

மீட்க நடவடிக்கை: அந்த ஓவியத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மேற்கொண்டுள்ளனா். அதேவேளையில் இந்த ஓவியம் எந்தக் காலக்கட்டத்தில், யாரால் திருடப்பட்டது என்பது குறித்தும், எப்படி வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டது என்பது குறித்தும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com