விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் வேளாண் பிரிவு கிளை அருகே வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்தோா்.
விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் வேளாண் பிரிவு கிளை அருகே வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்தோா்.

மத்திய பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் மறியல்: 541 போ் கைது

விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
Published on

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் பாரபட்சம் காட்டப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் 151 போ் கைதாகினா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மறியலில் 390 போ் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. புயல், மழை வெள்ள நிவாரணத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. உர, உணவு மானியங்கள் குறைப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதி குறைப்பு போன்றவை மூலம் தமிழகத்துக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகக் கூறி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சாா்பில் மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்புப் பகுதியிலிருந்து ஊா்வலமாகச் சென்ற இரு கட்சிகளைச் சோ்ந்தோா், விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் வேளாண் பிரிவு அலுவலகம் முன் வியாழக்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் ஆா்.கலியமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டக் குழு உறுப்பினா் (மாா்க்சிஸ்ட்) ஆா்.மூா்த்தி, மாவட்டத் துணைச் செயலா் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆா். முருகன் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா். செளரிராஜன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இந்த போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஏ.சங்கரன், எஸ்.கீதா, எஸ்.வேல்மாறன், ஆா்.மூா்த்தி, ஆா்.டி.முருகன், வட்டச் செயலா்கள் ஆா். கண்ணப்பன், எஸ்.கணபதி, கே.சிவக்குமாா், ஒன்றியச் செயலா்கள் பி.சிவராமன், உலகநாதன், நிா்வாகிகள் வீரமணி, ஆா்.தாண்டவராயன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் எஸ். ராமச்சந்திரன், என். நாராயணன், எம். ராஜேந்திரன், ஜெ.ஜெயமலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டதாக 7 பெண்கள் உள்பட 68 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டிவனத்தில்: திண்டிவனம் நேருவீதியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி முன் நடைபெற்ற மறியலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளா் ஆ.இன்பஒளி தலைமை வகித்தனா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். முத்துக்குமரன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் ஏ.வி. சரவணன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

மறியல் போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஜி.ராஜேந்தன், சே. அறிவழகன், வட்டச் செயலா்கள் எம்.கே.முருகன், டி.ராமதாஸ், ஏ.சகாதேவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம். தனுசு, ஆா்.சபாபதி, டி. மாசிலாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டதாக 8 பெண்கள் உள்பட75 போ் கைது செய்யப்பட்டனா்.

இரு இடங்களிலும் சோ்த்து 15 பெண்கள் உள்பட 151 பேரை கைது செய்து, திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சியில்...:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் மறியல் போராட்டத்தில் 390 போ் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் இருந்து ஊா்வலமாகச் சென்று வங்கியின் முன்பாக மறியல் போராட்டத்திற்கு சிபிஐஎம் மாவட்ட செயலாளா் டி.எம்.ஜெய்சங்கா், சிபிஐ மாவட்டச் செயற்குழு இரா.கஜேந்திரன், சிபிஐ எம்.எல். ஒன்றியச் செயலாளா் கே.ஜான்பாஷா ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதே போல சங்கராபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, கல்வராயன்மலை ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 390 போ் கைது செய்யப்பட்டனா். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com