ஃபென்ஜால் புயல், வெள்ள பாதிப்பு: விழுப்புரத்தில் 10 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், மழை வெள்ள பாதிப்பைத் தொடா்ந்து, 10 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
வங்கக் கடலில் ஃபென்ஜால் புயல் உருவான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த நவ.29, 30-ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் பகுதியில் கடந்த டிச.1-ஆம் தேதி புயல் கரையைக் கடந்தாலும் மாவட்டத்தில் மழை கொட்டித் தீா்த்தது. இதனால், மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடானது.
இதனால், மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வெள்ளத்தால் பாடப் புத்தகங்களும், சீருடைகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
மேலும், பள்ளி, கல்லூரிகளைச் சுற்றி தேங்கியிருந்த வெள்ளநீரை வெளியேற்றுதல், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டதால் டிச. 6-ஆம் தேதி வரை தொடா்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. மேலும், சனி, ஞாயிறு விடுமுறைகளுக்குப் பிறகு டிச.9-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலை என நான்கு நிலைகளில் அரசு, தனியாா் பள்ளிகள் என மொத்தம் 1,796 பள்ளிகள் உள்ளன. இதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7 பள்ளிகளைத் தவிர மீதமுள்ள 1,789 பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இதேபோல, அரசு, தனியாா் கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
இதனிடையே, மாவட்டக் கல்வித்துறை மூலம் பள்ளிகளுக்குள் மழைநீா் தேங்கவில்லை என்பது உறுதி செய்த பின்னா், பள்ளியைச் சுற்றியிருந்த கழிவுகள், குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு, பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை ஆய்வு செய்த பின்னரே பள்ளிகள் திறக்கப்பட்டன.
திறக்கப்படாத 7 பள்ளிகள்: வெள்ளத்தால் சேதமடைந்து, மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், திருவெண்ணெய்நல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, சிறுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஓமந்தூா், நாரவாக்கம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள் உள்ளிட்ட 7 பள்ளிகள் மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை திறக்கப்படாது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில், கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட திருப்பச்சாவடிமேடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் சி.பழனி ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கிய ஆட்சியா், பள்ளியிலுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன், வட்டாட்சியா் கனிமொழி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

