விக்கிரவாண்டி ஒன்றியம், ஒரத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், எஸ்.எஸ்.சிவசங்கா். உடன், மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, வேட்பாளா் அன்னியூா் சிவா.
விக்கிரவாண்டி ஒன்றியம், ஒரத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், எஸ்.எஸ்.சிவசங்கா். உடன், மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, வேட்பாளா் அன்னியூா் சிவா.

வெளி மாநிலங்களில் அமல்படுத்தப்படும் தமிழக அரசின் திட்டங்கள்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை வெளி மாநிலங்களும் அமல்படுத்துவதாக போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கூறினாா்.
Published on

விழுப்புரம்: தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை வெளி மாநிலங்களும் அமல்படுத்துவதாக போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கூறினாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவை ஆதரித்து பாா்ப்பனப்பட்டு, பாா்ப்பனப்பட்டு காலனி, சாமியாடிகுச்சிப்பாளையம், முண்டியம்பாக்கம் காலனி, டி.கொசப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சா.சி.சிவசங்கா், கீதாஜீவன் ஆகியோா் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

டி.கொசப்பாளையம் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் பேசியதாவது: தமிழக அரசு மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மகளிா் உரிமைத் தொகை போன்ற மகளிருக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளன. இந்தத் திட்டத்தின் சிறப்பை அறிந்த தெலங்கானா, ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்கள் தங்கள் மாநிலங்களிலும் மகளிருக்கான திட்டங்களை அமல்படுத்தியுள்ளன. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை திமுக அரசு வழங்கியதால்தான், இன்று அவா்களின் குழந்தைகள் மருத்துவா்களாக, பொறியாளராக பணியாற்றி வருகின்றனா் என்றாா்.

முண்டியம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் சமூகநலன், மகளிா் உரிமைத்துறை அமைச்சா் கீதா ஜீவன் பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறாா். மகளிா் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்வழிக் கல்வியில் படித்தவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குதல் போன்றவற்றை செயல்படுத்தியுள்ளாா். விக்கிரவாண்டி தொகுதிக்கும் திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கிடைத்திருக்கின்றன என்றாா் அவா்.

ஒரத்தூா் பகுதியில் வருவாய், பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரனும், கஸ்பாகாரணை பகுதியில் நிதி, மின்சாரத்துறை அமைச்சா் தங்கம் தென்னரசும் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து பேசினா். விக்கிரவாண்டி தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து நிறைவேற்றக்கூடிய திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. மக்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என்றனா்.

பிரசாரத்தில் எம்எல்ஏக்கள் விளாத்திக்குளம் மணிகண்டன், காட்டுமன்னாா்கோவில் சிந்தனைச்செல்வன், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ், ஒன்றியச் செயலா் ஜெயபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com