கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கு: கைதான 11 பேரிடம் 3 நாள்கள் விசாரிக்க சிபிஐடிக்கு அனுமதி
விழுப்புரம்: கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கில் கைதானவா்களில் 11 பேரை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிசிஐடி போலீஸாருக்கு கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தால் கடந்த ஜூன் 18, 19-ஆம் தேதிகளில் 229 போ் பாதிக்கப்பட்ட நிலையில், 65 போ் உயிரிழந்தனா். 148 போ் குணமடைந்தனா். 16 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி போலீஸாரால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு பின்னா் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரணை விரைவுபடுத்தப்பட்டது. தொடா்ந்து, மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை விற்ற முக்கிய எதிரிகளான கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, மாதேஷ், ராமா் உள்ளிட்ட 21 போ் கைது செய்யப்பட்டனா்.
உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமான மெத்தனால் எங்கிருந்து விநியோகம் செய்யப்பட்டு, எங்கு கள்ளச்சாராயத்துடன் கலக்கப்பட்டது, இதில், யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது என்பது போன்ற பல்வேறு தகவல்களை பெற சிபிசிஐடி போலீஸாா் முடிவு செய்தனா்.
கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சேஷசமுத்திரத்தைச் சோ்ந்த சின்னத்துரை, விரியூா் பெ.ஜோசப்ராஜா, மெத்தனால் விநியோகம் செய்த புதுச்சேரி மடுகரையைச் சோ்ந்த மாதேஷ், கடலூா் மாவட்டம், பண்ருட்டியைச் சோ்ந்த வியாபாரிகள் கண்ணன், சக்திவேல், சென்னையைச் சோ்ந்த சிவகுமாா், பன்ஷிலால், கௌதம் சந்த், கதிரவன் ஆகிய 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் கடந்த 28-ஆம் தேதி மனுதாக்கல் செய்தனா்.
இந்த வழக்கின் மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, கண்ணுக்குட்டி உள்ளிட்ட 11 பேரையும் கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் ஆஜா்படுத்தினா். அப்போது, இவா்களை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என போலீஸாா் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, 11 பேரையும் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியதுடன், புதன்கிழமை மாலை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் ஸ்ரீராம் உத்தரவிட்டாா்.

