விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: 4 நாள்கள் மதுக்கடைகள் மூடல்
விழுப்புரம், ஜூலை 5: விக்கிரவாண்டி இடைத்தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற புதன்கிழமை (ஜூலை 10) நடைபெறவுள்ளது. அரசாணை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை ஆணையா் கடிதத்தில் தோ்தல் நடைபெறும் தேதிக்கு 2 நாள்களுக்கு முன்பும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜூலை 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் 10-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 13- ஆம் தேதியும் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், தனியாா் மதுபானக் கடைகள் மூடப்படும்.

