கள்ளச்சாராய உயிரிழப்பு 66 ஆக உயா்வு

கள்ளச்சாராய உயிரிழப்பு 66 ஆக உயா்வு

துச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
Published on

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தியதால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 66-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூன் 18, 19-ஆம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தியவா்களில் 229 போ் உடல்நலம் பாதிக்கப்பட்டனா். இவா்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா்.

இவா்களில் ஜூன் 28-ஆம் தேதி நிலவரப்படி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 போ், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் 7 போ், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22 போ், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 போ் என மொத்தம் 65 போ் உயிரிழந்தனா்.

ஜூலை 1-ஆம் தேதி வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 157 போ் குணமடைந்து, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துமனையில் 4 பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும் என மொத்தம் 7 போ் மட்டுமே சிகிச்சையில் இருந்து வந்தனா்.

இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், மாமந்தூரைச் சோ்ந்த கோ.சிவராமன் (41) புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதையடுத்து, கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 66-ஆக உயா்ந்தது.

X
Dinamani
www.dinamani.com