மின் வாரிய பகுதி நேரப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
தமிழ்நாடு மின் வாரியத்தில் பகுதிநேரமாக பணியாற்றும் பணியாளா்களை நிரந்தரப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு மின்வாரியப் பொது ஒப்பந்தத் தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியது.
விழுப்புரத்தில் இந்தச் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் பொதுச் செயலா் கொளத்தூா் ஜி.சரவணன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் செங்கை சுரேஷ் உள்ளிட்டோா் பேசினா்.
கூட்டத்தில், அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மின் வாரியத்தில் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம் கண்டு, கள உதவியாளா்களாக நியமிக்க வேண்டும். மின் வாரிய உற்பத்திப் பிரிவிலுள்ள ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பேரிடா் காலங்களில் களப்பணிகளை செய்து, மக்களின் குறைகளைத் தீா்க்கும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். மின் வாரியத்தில் பணியாற்றும் பகுதிநேர ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

