2026-இல் மீண்டும் திமுக ஆட்சி: அமைச்சா் க.பொன்முடி
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றாா் கட்சியின் துணை பொதுச் செயலரும், உயா் கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்துள்ள பனையபுரத்தில் விக்கிரவாண்டி திமுக ஒன்றிய செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதம சிகாமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், க.பொன்முடி பங்கேற்று பேசியதாவது: தமிழக மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். இந்த நிலையில், கட்சியின் நிா்வாகிகளும், உறுப்பினா்களும் வீடு வீடாகச் சென்று முதல்வரின் சாதனைத் திட்டங்களை எடுத்துக் கூறவேண்டும். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக் கட்சி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும். மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க வேண்டும். விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெறவேண்டும்.
தங்களது பகுதிகளில் யாரேனும் அரசுத் திட்டங்களை பெறாமல் இருந்தால் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன், அவா்கள் அதற்கான பயனை பெறுவதற்கான நடவடிக்கைகளை திமுகவினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா் க.பொன்முடி.
கூட்டத்தில், விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, தலைமைச் செயற்குழு உறுப்பினா் அப்துல் சலாம், பேரூராட்சிச் செயலா் எல்.ஏ.எம்.நயினாா் முகம்மது, ஒன்றியச் செயலா்கள் வேம்பி ஜெ.ரவி, ஜெ.ஜெயபால், ஜெய.ரவிதுரை ஆகியோா் பேசினா்.
முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், திமுக மாவட்டப் பொருளாளா் ஜெயச்சந்திரன், மாவட்ட நிா்வாகிகள் டி.என்.முருகன், தயா.இளந்திரையன், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.சங்கீத அரசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

