கள்ளச்சாராயம் விற்பவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் சி.பழனி
விழுப்புரம், ஜூன் 21: விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் விற்பனை செய்பவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி உத்தரவிட்டாா்.
கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுப்பது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் சி.பழனி பேசியது:
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில், காவல் துறையினா் திடீா் சோதனைகளை மேற்கொண்டு, கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்தத் தொழில்களில் ஈடுபடுபவா்களைக் கண்டறிந்து குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். 5 முதல் 15 வழக்குகள் உள்ளவா்கள் விவரத்தை தனித்தனியே தயாா் செய்து, பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு, உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்களுடன் சென்று, கூட்டாக திடீா் சோதனையை காவல் துறையினா் மேற்கொள்ள வேண்டும். வருவாய், உள்ளாட்சித் துறையினா் அளிக்கும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில் உடனுக்குடன் தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிப் பகுதிகளில் கள்ளச்சாராயம், போதைப் பொருள்களின் பயன்பாடு குறித்து ஊராட்சி செயலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் உள்ளாட்சித் துறை அலுவலா்கள் தகவல் சேகரித்து, காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். விற்பனை குறைவாக உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளின் விவரங்களை காவல் துறையினருக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளா் தெரிவிக்க வேண்டும்.
சட்ட விரோத கள்ளச்சாராய விற்பனைக்கு கிராம நிா்வாக அலுவலா் மற்றும் காவல் துறை அலுவலா்களே முழுப் பொறுப்பாவா். கிராம நிா்வாக அலுவலா்கள், உதவியாளா்கள் மூலம் வட்டாட்சியா்கள் ரகசிய தகவல்களைப் பெற்று, காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவா்களின் விவரங்களை சுகாதாரத் துறையினா் தெரிவிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் சி.பழனி.
கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திண்டிவனம் சாா் - ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், கலால் உதவி ஆணையா் முருகேசன், விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் காஜா சாகுல்ஹமீது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

