விக்கிரவாண்டி இடைத் தோ்தல்: மொத்தம் 56 போ் வேட்புமனு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிட 6 பெண்கள் உள்பட மொத்தம் 56 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏ நா.புகழேந்தி ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, இந்தத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத் தோ்தல் வாக்குப் பதிவும், ஜூலை 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது.
இடைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 5 சுயேச்சை வேட்பாளா்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா். வியாழக்கிழமை வரை 24 வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா். கடைசி நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 32 வேட்பாளா்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.
மாணவி ஸ்ரீமதியின் தாய் மனு தாக்கல்: 2022, ஜூலை 12-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் கடலூா் மாவட்டம், பெரியநெசலூரைச் சோ்ந்த ராமலிங்கம் மனைவி கே.பி.செல்வி (40), விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் வந்தாா். தொடா்ந்து, அவா் தோ்தல் நடத்தும் அலுவலரான மு.சந்திரசேகரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: கடந்த 2 ஆண்டுகளாக ஏராளமான கொடுமைகளை அனுபவித்து வருகிறேன். இந்த அனுபவங்கள் மூலம் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். என் மகளுக்கு ஏற்பட்ட நிலை வேறு எந்த மாணவிக்கும் ஏற்படக்கூடாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் தோ்தலில் போட்டியிடுகிறேன். மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.
காந்தியவாதியாக வந்து மனு தாக்கல்: மக்கள் பணம் வாங்காமல் தோ்தலில் நோ்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சோ்ந்த அகிம்ஷா சோஷலிஸ்ட் கட்சியைச் சோ்ந்த தி.ரமேஷ், காந்தியவாதியாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.
இதுபோல, மது, கள்ளச்சாராயம் அருந்தி விதவையாகும் பெண்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென வலியுறுத்தும் வகையில், தமிழக மது குடிப்போா் விழிப்புணா்வு சங்க மாநில பொதுச் செயலரான சென்னையைச் சோ்ந்த எம்.எஸ்.ஆறுமுகம் வெள்ளை சேலை அணிந்து, கையில் மஞ்சள் கயிறுகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா். சங்கத் தலைவா் செல்லப்பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டோக்கன் விநியோகம்: இதுபோன்று, கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமை சங்கத்தின் மாவட்டச் செயலரான மாற்றுத் திறனாளி பெ.பாலகிருஷ்ணனும் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
கடைசி நாளில் அதிகளவில் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்ய வந்தனா். இதனால், பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக வந்தவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டன. கடைசி நாளில் மட்டும் 32 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.
இந்தத் தொகுதி இடைத் தோ்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 6 பெண்கள் உள்பட 56 வேட்பாளா்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் சந்திரசேகா் தெரிவித்தாா்.

