அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கையால் உயிரிழப்பு அதிகரிப்பு: இரா.முத்தரசன்
அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால்தான் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டினாா்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை இரா.முத்தரசன் வெள்ளிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கள்ளக்குறிச்சி முன்னாள் மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. ஆகியோா் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்த அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஏழை, எளிய தொழிலாளா்கள். சாராயம் விற்பவா்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனா். மெத்தனாலை விநியோகம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கள்ளச்சாராய விற்பனைக்கு உடந்தையாக இருந்த காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களையும் கைது செய்ய வேண்டும் என்றாா் இரா.முத்தரசன்.
தொடா்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்து அவா் ஆறுதல் கூறினாா்.

