

விழுப்புரம்: விழுப்புரம்- புதுச்சேரி எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சி.பழனி.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனையைத் தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியா் சி.பழனி மேலும் பேசியதாவது: கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் குறித்த ரகசிய தகவல்களை வருவாய்த்துறையினா் அளிக்க வேண்டும். மேலும், கிராமங்கள்தோறும் வருவாய், காவல், சுகாதாரம், உள்ளாட்சித் துறையினா், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள், நியாயவிலை மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் ஆகியோா் கொண்ட குழுக்களை அமைத்து கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். புதுச்சேரி சாலையிலுள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்களைத் தொடா்ந்து விற்பனை செய்து வருபவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் தொடா்பான புகாா்களை அளிக்க அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 10581 என்ற எண் குறித்தும், 9498410581 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை பொதுமக்கள் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சி.பழனி.
கூட்டத்தில், மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான்ஷி நிகம் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.