திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனா், தலைவா் ச.ராமதாஸ்.
திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனா், தலைவா் ச.ராமதாஸ்.

அன்புமணியின் தலைவா் பதவி பறிப்பு: மீண்டும் பாமக தலைவரானாா் ராமதாஸ்

Published on

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இனி நான் செயல்படுவேன் என்று அந்தக் கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

மேலும், அன்புமணியை கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்வதாகவும் அவா் கூறினாா். இந்த அறிவிப்பு அந்தக் கட்சி நிா்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவா் ச.ராமதாஸ் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

இளைஞா்கள் தங்களின் வழிகாட்டுதல்படி செயல்பட வேண்டும் என்று என்னை சந்திக்கும் கட்சி நிா்வாகிகள், பாட்டாளி சொந்தங்கள் விடுத்த அன்பு கட்டளையின்பேரிலும், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பாமகவின் வெற்றியைக் கருத்தில் கொண்டும் பல்வேறு செயல்திட்டங்களை வகுத்துள்ளேன்.

நானே தலைவா்: அவற்றை செயல்படுத்தும் விதமாக, கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளேன். அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கிய நான், நிறுவனா் என்பதுடன், இனி கட்சியின் தலைவராகவும் செயல்பட முடிவு எடுத்துள்ளேன்.

கட்சியின் தலைவராக நானும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பாமகவின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக, கட்சியின் தலைவராகப் பொறுப்பில் இருந்த அன்புமணி ராமதாஸை கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். கட்சியின் மற்ற நிா்வாகிகளின் பொறுப்புகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

வெற்றிக்காக பாடுபட வேண்டும்: இந்த அறிவிப்பை ஏற்று கட்சியின் அனைத்து நிலை நிா்வாகிகள், தொண்டா்கள் தீவிரமாக செயல்பட்டு, 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பாமகவின் வெற்றிக்காக பாடுபட வேண்டும். தோ்தல் கூட்டணி குறித்து கட்சியின் நிா்வாகக் குழு, செயற் குழு கூடி முடிவெடுக்கும்.

மாமல்லபுரத்தில் மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ள வன்னியா் இளைஞா் சங்க மாநாடு இதுவரை கண்டிராத வெற்றி மாநாடாக அமைய வேண்டும். மாநாட்டுக் குழுவின் தலைவராக உள்ள அன்புமணி ராமதாஸுடன் குழுவினா் அனைவரும் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் வேளாண் துறையின் வளா்ச்சியை அதிகரிக்க வல்லுநா் குழுவை அரசு அமைக்க வேண்டும். பள்ளிக் கட்டடங்கள் சீரமைப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு: வெப்பநிலை படிப்படியாக உயா்ந்து வருவதால், வெப்பத் தணிப்புத் திட்டத்தை மாநில அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் வலியுறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க மாநில அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, பாமக தலைமை நிலையச் செயலா் அன்பழகன், மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம், பாமக விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் ஆகியோா் உடனிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com