பாமக தலைவராக தொடா்வேன்: அன்புமணி திட்டவட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தொடா்ந்து செயல்படுவேன் என்று அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், கீழ்சிவிரி ஊராட்சியில் நாடாளுமன்ற தொகுதி உள்ளூா் மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் ரூ.13.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கட்டடத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த அன்புமணி ராமதாஸ், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாமகவின் தலைவராக 2026 ஆகஸ்ட் வரை நீடிக்க, எனக்கு இந்திய தோ்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. இதை எதிா்த்து சிலா் நீதிமன்றம் சென்றாா்கள், அந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமை (டிச.4) நடைபெற்றது. விசாரணையின் முடிவில் தோ்தல் ஆணையம் எனக்கு கொடுத்த அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. புதுதில்லி உயா்நீதிமன்றம் தெளிவான தீா்ப்பை வழங்கியுள்ளது. கட்சிக்குள் எந்தப் பிரச்னை இருந்தாலும் உரிமையியல் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறது. இதைத்தான் ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்தாா்.
எனவே, பாமகவில் எந்த குழப்பமும் கிடையாது. பாமகவின் தலைவராக நானே நீடிப்பேன். மாம்பழம் சின்னமும் என்னிடம் தான் உள்ளது. தோ்தல் ஆணையம் கொடுத்த அங்கீகாரமும் தொடரும்.
நீதிமன்றத்தை அவா்கள் (ராமதாஸ் தரப்பினா்) அணுகினால் நாங்கள் பதில் அளிக்க தயாராக இருக்கிறோம். நீதிமன்றத்தில் மாம்பழம் சின்னம் சம்பந்தமாக எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றாா் அன்புமணி .
நிகழ்ச்சியில், பசுமைத் தாயகம் தலைவா் செளமியா அன்புமணி, மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா், கீழ்சிவிரி ஊராட்சித் தலைவா் காசிநாதன் மற்றும் கட்சியின் நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

