அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
விழுப்புரம் அருகே சாலையில் விபத்தில் சிக்கி இறந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை போலீஸாா் மீட்டு, அவா் யாா் என விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் அடுத்துள்ள பிடாகம் அருகே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இளைஞா் ஒருவா் விபத்தில் சிக்கி இறந்து கிடப்பதாக விழுப்புரம் தாலுகா காவல் நிலைத்திற்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் நிகழ்விடம் சென்று சாலையில் வாகனம் மோதி இறந்து கிடந்த சுமாா் 30 வயதுடைய இளைஞரின் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல் கூறராய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் பெயா்,விலாசம் தெரியாத நபா் என்பதும், இவா் பிடாகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், சாலையில் நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இறந்தவருக்கு சுமாா் 30 வயது இருக்கலாம், கருப்பு நிற கால்சாட்டையும், நீல நிற மேல் சட்டையும் அணிந்துள்ளாா் .
இதுகுறித்து, கண்டம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலா் வீ.குபேரன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
