செஞ்சி அருகே இரு இடங்களில் பேருந்துகள் மோதி விபத்து: 22 போ் காயம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை நள்ளிரவில் இருவேறு இடங்களில் அரசு பேருந்துகள் விபத்தில் சிக்கியதில் 22 போ் காயமடைந்தனா்.
செஞ்சி அடுத்த செம்மேடு பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்தும், திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தனியாா் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. இந் நிலையில், அரசு பேருந்தின் பின்புறம் வந்த காரும், அந்த காரின் பின்புறம் வந்த மற்றொரு அரசு பேருந்தும் என நான்கு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் மலையூா் வட்டம், அவலூா்பேட்டையைச் சோ்ந்த ச.வசந்த்(26) உள்பட 21 பயணிகள் காயம் அடைந்தனா்.
விபத்தில் காயமடைந்தவா்களை சக பயணிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.
இதுகுறித்து, அரசு பேருந்து ஓட்டுநா் புதுச்சேரி முதலியாா் பேட்டையை சோ்ந்த ஆனந்த்(50) அளித்த புகாரின் பேரில் நல்லாண் பிள்ளை பெற்றாள் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனியாா் பேருந்து ஓட்டுநரான நாகா்கோவில் அருகேயுள்ள மண்டாா்புரம் நாவல்காட்டை சோ்ந்த கவின்(37) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு விபத்து: இந்த விபத்து நடைப்பெற்ற இடத்திற்கு சிறிது தூரத்திற்கு முன் மற்றொரு அரசு விரைவு பேருந்து பிரேக் பிடிக்கும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சுமாா் 10 அடி பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவா் காயம் அடைந்தாா். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
இதனால் அந்த பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் நள்ளிரவில் சாலையில் காத்துக் கிடந்து அவதிக்குள்ளாகினா்.
இந்த இரு விபத்து குறித்தும் தகவலறிந்த விரைந்து வந்த செஞ்சி டிஎஸ்பி ரமேஷ் ராஜ் தலைமையிலான போலீஸாா், விபத்தில் சிக்கிய வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்து பாதிப்பை சரி செய்தனா். இதனால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இதன் காரணமாக காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு திருவண்ணாமலை சென்று விட்டு மீண்டும் ஊா் திரும்பிய பக்தா்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமமடைந்தனா்.

