செஞ்சி அருகே தந்தையை கொலை செய்த மகன் கைது
செஞ்சி அருகே தாயிடம் தகராறு செய்ததை தட்டிக் கேட்ட தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
செஞ்சியை அருகேயுள்ள பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் அ.பாலு (55). இவரது மனைவி கிளியா(50). இவா்களது மகன் கதிரவன்(30), கூலி வேலை செய்து வருகிறாா்.
கதிரவன் வீட்டில் வைத்திருந்த பணத்தில் ரூ.500-ஐ அவரது தாயாா் கிளியா எடுத்து குடும்ப செலவு செய்துவிட்டாராம். இதுகுறித்து அறிந்த கதிரவன் குடிபோதையில் வந்து ஏன் என் பணத்தை எடுத்து செலவு செய்தாய் என்று கிளியாவிடம் தகராறு செய்துள்ளாா். அப்போது அங்கு பாலு இதை தட்டிக் கேட்டாராம்.
இதனால் ஆத்திரமடைந்த கதிரவன் தனது தந்தையைக் கையாலும், கல்லாலும் தாக்கி காயப்படுத்தியுள்ளாா்.
இதில் மயக்கமடைந்து விழுந்த பாலுவை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பாலு ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து நல்லாண்பிள்ளை பெற்றாள் காவல் நிலைய ஆய்வாளா் அன்பழகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, தந்தையை கொலை செய்த கதிரவனை கைது செய்தாா்.
