துணை முதல்வா் வருகை: அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

Published on

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் வருகை தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, விழுப்புரத்தில் டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா்.

இதையொட்டி, ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், அரசு விழாவுக்காக மேடை அமைத்தல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் விவரம், அனைத்துத் துறை திட்டப்பணிகள் குறித்து அலுவலா்களுடன் ஆலோசித்தாா்.

மேலும், துணை முதல்வா் விழாவுக்கு வரும் வழித்தடம், பாதுகாப்பு வசதிகள், பயனாளிகள் தோ்வுப் பட்டியல் குறித்தும், உயா் அலுவலா்கள் தங்குவதற்கான வசதிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், கூடுதல் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, பயிற்சி உதவி ஆட்சியா் ரா. வெங்கடேசுவரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி உள்ளிட்ட பல் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com