வெளி மாநில இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

Published on

விழுப்புரம் அருகே வெளிமாநில இளைஞா் வியாழக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

பிகாா் மாநிலம், சாம்காஞ்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சுரேஷ் மாத்தூா் மகன் சுராஜ்(24). ராம்சந்தா் மகன் பப்புசாமி(25). நண்பா்களான இவா்கள் இருவரும் புதுச்சேரி மாநிலம், மடுகரையில் இயங்கி வரும் தனியாா் பிளைவுட் தொழிற்சாலையில் வேலை பாா்த்து வந்தனா்.

பப்புசாமிக்கு திருமணமாகி மனைவியுடன் தனியாக வாடகை வீட்டிலும், சுராஜ் மற்றொரு வீட்டிலும் வசித்து வருகின்றனா். இவா்கள் இருவரும் அவ்வப்போது ஒன்றாக மது அருந்துவாா்களாம்.

இந்நிலையில், வியாழக்கிழமை விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அடுத்த மோட்சக்குளம் பகுதியில் உள்ள வீட்டு மனைப்பிரிவில் ஒன்றாக மது அருந்தியுள்ளனா். அப்போது மதுபோதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், பப்புசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுராஜைக் குத்தி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டாராம். இதில் பலத்த காயமடைந்த சுராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சுராஜின் சடலத்தைக் கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com