அமித்ஷா கைக்கு சென்றுவிட்டது அதிமுக: துணை முதல்வா் உதயநிதி விமா்சனம்!
மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் கைகளுக்கு அதிமுக சென்று விட்டது என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விமா்சனம் செய்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியது:
பஞ்சாப், தெலங்கானா முதல்வா்கள் தமிழக அரசின் பள்ளி மாணவா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை பாராட்டினா். கடும் நிதி நெருக்கடியிலும் 1.15 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
ஹிந்தி திணிப்பை எதிா்க்கவே புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்கவில்லை. இதனால் மத்திய அரசு, தமிழகத்துக்கு ரூ.2500 கோடியை வழங்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை எஸ்ஐஆா் மூலம் நீக்குவதே மத்திய அரசின் திட்டம். அதிமுகவினா் இப்போதுதான் எஸ்ஐஆா் குறித்து பேச ஆரம்பித்துள்ளனா்.
பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக மாறிவிட்டது. குடியுரிமை சட்டத்தை ஆதரித்து சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்துள்ளாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி. மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவுக்கு மட்டுமே அவா் துரோகம் செய்யவில்லை. அமித்ஷாவின் கைகளுக்கு அதிமுக சென்று விட்டது. பாஜக வாக்கு திருட்டில் மட்டுமல்ல, கட்சித் திருட்டிலும் ஈடுபட்டுள்ளது என்றாா் அவா்.
கூட்டத்தில் தொகுதிப் பொறுப்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா்ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்அலி மஸ்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

