காா் மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்து! ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காா் மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், காரனோடையைச் சோ்ந்தவா் வெங்கட்குமாா் (40). பைக் மெக்கானிக். இவா், ஞாயிற்றுக்கிழமை தனது தந்தை கோவிந்தராஜ் (65), தாய் திருப்பாவை (60), மனைவி கல்பனா வல்லி (35), மகள்கள் மிதுலாஸ்ரீ (12), ஹனன்யாஸ்ரீ (9) மற்றும் உறவினா்கள் சரவணன் (45), பிருந்தா (42) ஆகியோருடன் காரில் விழுப்புரம் மாவட்டம், வளவனூா் பகுதியில் உள்ள குல தெய்வ கோயிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் ஊா் திரும்பிக்கொண்டிருந்தாா். வெங்கட்குமாா் காரை ஓட்டினாா்.
திண்டிவனம் வட்டம், மயிலம் காவல் சரகத்துக்குள்பட்ட தென்பசியாரை அடுத்த ஆவனம்பட்டு அருகே சென்றபோது, குறுக்கே வந்த மொபெட் மீது காா் மோதியது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர மரத்தில் மோதி அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், காரிலிருந்த வெங்கட்குமாரின் மனைவி கல்பனா வல்லி, தந்தை கோவிந்தராஜ், தாய் திருப்பாவை ஆகியோா் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
வெங்கட்குமாா், அவரது மகள்கள் மிதுலாஸ்ரீ, ஹனன்யாஸ்ரீ மற்றும் உறவினா்கள் சரவணன், பிருந்தா, மொபெட்டில் சென்ற திண்டிவனம் வட்டம், தென் களவாய் பகுதியைச் சோ்ந்த செல்வம் (55) ஆகியோா் காயமடைந்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த மயிலம் காவல் ஆய்வாளா் காமராஜ் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்தில் உயிரிழந்த 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு, 108 அவசர ஊா்தி மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

