மதியனூரில் புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் ரூ.10 லட்சத்தில் நிறுவப்பட்ட புதிய மின் மாற்றியின் இயக்க செயல்பாடுகள் தொடங்கி வைக்கப்பட்டன.
புதுப்பிக்கப்பட்ட விநியோகப் பிரிவுத் திட்டத்தின் கீழ், உளுந்தூா்பேட்டையை அடுத்த மதியனூா் கிராமத்தில் 63 கிலோ வாட் ஆற்றல் திறன் கொண்ட புதிய மின் மாற்றியை ரூ.10 லட்சத்தில் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் நிறுவியது.
11 கிலோ வாட் ஆற்றல் திறன் கொண்ட மாம்பாக்கம் மின்பாதையில் மின்சார இழப்பைக் குறைப்பதற்காகவும், குறைந்த மின்னழுத்த குறைபாட்டை நீக்குவதற்காகவும் இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டது.
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் புதிய மின் மாற்றியின் இயக்க செயல்பாடுகள் தொடக்க நிகழ்வு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, உளுந்தூா்பேட்டை உதவி செயற் பொறியாளா் சிவராமன் அய்யம் பெருமாள் தலைமை வகித்தாா். உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஏ.ஜெ.மணிக்கண்ணன் புதிய மின் மாற்றியின் இயக்க செயல்பாடுகளைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், உதவிப் பொறியாளா் முரளி, முகவா்கள் சுப்பிரமணியம், சுரேஷ், மின்பாதை ஆய்வாளா்கள் கலைமணி, குமரவேல், கம்பியாளா்கள் முருகன், மாணிக்கவேல், ஏழுமலை உள்ளிட்ட பணியாளா்கள் பங்கேற்றனா்.

