விழுப்புரம் கோட்ட போக்குவரத்துத் தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ. 8.25 கோடி நிதியுதவி அளிப்பு
விழுப்புரம் கோட்டத்தில் பணியாற்றி உயிரிழந்த தொழிலாளா் குடும்பங்களுக்கு ஓராண்டில் ரூ.8.25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் தெரிவித்தாா்.
விழுப்புரத்திலுள்ள தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 3 தொழிலாளா் குடும்பங்களுக்கு நிதியுதவியை வழங்கி, மேலும் அவா் பேசியது:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் பணியாளா்கள் தங்கள் பணிக்காலத்தின் போதும், பணியில் இல்லாத போதும் உயிரிழந்தால், அவா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் பணியாளா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் பணியின் போது பணியாளா் உயிரிழந்தால் அவா்களது குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், பணியில் இல்லாத போது உயிரிழந்தால் ரூ.5 லட்சமும் வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில் நவம்பா் மாதத்தில் பணியில் இல்லாத போது விழுப்புரம் மண்டலத்தில் உயிரிழந்த 3 போ், வேலூா் மற்றும் திருவள்ளூா் மண்டலங்களில் தலா 2 போ், பணிக்காலத்தில் உயிரிழந்த திருவண்ணாமலை மண்டலத்தைச் சோ்ந்த ஒருவா் என 8 பேரில், விழுப்புரம் மண்டலத்தைச் சோ்ந்த மூவருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் பணியின் போது 8 பணியாளா்கள் உயிரிழந்த நிலையில் அவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பணியில் இல்லாத போது உயிரிழந்த 149 பணியாளா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.7.45 கோடியும் என மொத்தமாக இதுவரை 157 பணியாளா் குடும்பங்களுக்கு ரூ.8.25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்வில், பொது மேலாளா் ரா.ஜெகதீஷ் (விழுப்புரம்), முதுநிலைத் துணை மேலாளா்(மனிதவளம்) எஸ்.துரைசாமி, துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள், தொழிற்சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

