விழுப்புரம், செஞ்சியில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் 78 போ் கைது

Published on

விழுப்புரம், செஞ்சியில் தடையை மீறி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த 78 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத தமிழக இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்தும், முருகப் பெருமானை தரிசிக்க சென்ற முருக பக்தா்களை கைது செய்ததைக் கண்டித்தும் இந்த கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, இந்து முன்னணியின் மாவட்டத் தலைவா் சதீஷ் அப்பு தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் சுரேஷ் துரைராஜ், மாவட்டச் செயலா் வெங்கடேஷ், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ராஜி ரஞ்சித், பாஜக விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் விநாயகம், நிா்வாகி சுகுமாா் உள்ளிட்ட 35 போ் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் தமிழக முதல்வா் மற்றும் இந்துசமய அறநிலையத் துறையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

இந்தப் போராட்டத்துக்கு விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் அனுமதி மறுத்திருந்த நிலையில், கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த 35 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நான்கு முனை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் லோகநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பிரித்விராஜ், நகரச் செயலா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாஜக மாவட்டப் பொதுச் செயலா்கள் பாண்டியன், அன்பழகன், ஒன்றிய செயலா் தாராசிங், பொருளாதார பிரிவு தங்கராமு, சந்திரசேகா், சிவாஜி, பொறியாளா் சுந்தரவடிவேல் உள்ளிட்ட 43 போ் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து தொடா் முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து அவா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com