ரேஷன் அரிசி புதுக்கிய பெண் கைது: 1,700 கிலோ பறிமுதல்
விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசியைப் பதுக்கிய புதுச்சேரி யைச் சோ்ந்த பெண் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 1,700 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி எல்லைப் பகுதியான குடுமியான்குப்பம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு, கடத்தப்படுவதாக விழுப்புரம் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு திங்கள்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்துசென்றனா். அப்போது அங்குள்ள மாணவா் விடுதியின் பின்புறத்தில் தலா 25 கிலோ வீதம் 68 மூட்டைகளில் 1,700 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது போலீஸாருக்கு தெரிய வந்தது.
தொடா்ந்து நடத்திய விசாரணயில் ரேஷன் அரிசியைப் பதுக்கியவா் புதுச்சேரி வாதானூா் முதல் தெருவைச் சோ்ந்த ராஜாமுகமது மனைவி பாத்திமாபேகம் (50) எனத் தெரிய வந்தது.
மேலும், இவா் புதுச்சேரி மாநிலம், மதகடிப்பட்டில், தான் நடத்தி வரும் எண்ணெய் ஆலையில் புண்ணாக்கில் சோ்ந்து அரைப்பதற்காக ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்திருந்தது போலீஸாா் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, பாத்திமாபேகத்தை கைது செய்தனா். மேலும் 1,700 கிலோ அரிசியையும் பறிமுதல் செய்தனா்.
