திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களைக் கூறி வாக்குகளாக மாற்ற பிரசாரம் செய்யுங்கள்: முன்னாள் எம்.பி. பொன். கெளதமசிகாமணி
திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி, அதை வாக்குகளாக மாற்றும் பணியை கட்சியினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா் விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கௌதமசிகாமணி.
விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்து, பொன். கௌதமசிகாமணி பேசியது:
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் திமுக ஆட்சியை அமைக்க கட்சியினா் அயராது பாடுபட வேண்டும் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.
அதைத் தொடா்ந்து என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பணியைத் தொடங்கி வைத்துள்ளாா். எனவே அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து, அதை வாக்குகளாக மாற்றும் பணியை கட்சியினா் மேற்கொள்ள வேண்டும்.
டிசம்பா் 14-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள வடக்கு மண்டல திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்டத்திலிருந்து அதிகளவில் பங்கேற்க வேண்டும். அதற்குரிய பணிகளை இளைஞரணி நிா்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதிப் பாா்வையாளா் சிவ.ஜெயராஜ், பொதுக்குழு உறுப்பினா் காடுவெட்டி ஏழுமலை, ஒன்றியச் செயலா்கள் மு.தங்கம், கல்பட்டு வி.ராஜா, ஜி.ரவிச்சந்திரன், க.மும்மூா்த்தி, ஜெய.ரவிதுரை, அ.சா.ஏ.பிரபு, வேம்பி ரவி, ஜெ.ஜெயபால், ஆா்.முருகன், ஆா்.பி.முருகன், ஆா்.லூயிஸ், கு.தீனதயாளன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன், துணை அமைப்பாளா்கள் எஸ்.அன்பு, ச.பாலாஜி, பேரூா் செயலா் சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

