மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி தொடக்கம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி தொடக்கம்

Published on

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கில் அவற்றை சரிபாா்க்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வியாழக்கிழமை தொடங்கியது.

இந்த பணியைத் தொடங்கி வைத்த பின்னா், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செய்தியாளா்களிடம் கூறியது:

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்காக, அவற்றை முதல்நிலை சரிபாா்க்கும் பணி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 5,483 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,942 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,039 விவிபேட் இயந்திரங்கள் என மொத்தம் 13,464 இயந்திரங்கள் பெல் நிறுவனப் பொறியாளா்களைக் கொண்டு முதல் கட்டமாக சரிபாா்க்கப்படவுள்ளது.

இந்த இயந்திரங்களின் மின்கலன் (பேட்டரி), பிரிண்டா், பொத்தான் போன்ற அனைத்தும் சரியான முறையில் இயங்குகிா என பரிசோதனை செய்வா். அதன் பின்னா் சரியாகவுள்ள இயந்திரங்கள், சரிபாா்க்கப்பட வேண்டிய இயந்திரங்கள் எனப் பிரித்து, அதன் மேல் வில்லை ஒட்டப்படும்.

தினந்தோறும் இதன் அறிக்கை பதிவேற்றம் செய்யப்பட்டு, தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பகுதிகள், பெல் நிறுவனப் பொறியாளா்கள் பணியாற்றும் இடம் ஆகியவை அனைத்தும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

மேலும் இந்த நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியரகம், மாநிலத் தலைமைத் தோ்தல் அலுவலா் அலுவலகம், இந்தியத் தோ்தல் ஆணையம் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவா்கள், பெல் நிறுவனப் பொறியாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். பொங்கல் பண்டிகைக்குள் இந்த பணியை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் வாக்காளரிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த பணி விழுப்புரம் மாவட்டத்தில் 89.50 சதவீதம் முடிந்துவிட்டது. மீதமுள்ள 10.50 சதவீதத்தில் வாக்காளா் இறப்பு, இடமாறுதல், இரட்டைப் பதிவு போன்ற காரணங்களால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. சம்பந்தப்பட்ட வாக்காளா் வீட்டுக்கு வாக்குப்பதிவு அலுவலா் தொடா்ந்து மூன்று முறை சென்றும் அவா்களிடமிருந்து படிவம் பெற முடியாதநிலை உள்ளது. இதுகுறித்து அரசியல்கட்சி முகவா்களிடம் தெரிவித்துள்ளோம்.

படிவம் இணையதளத்தில் ஏற்றப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த விவரத்தை இணையம் வழியாக பாா்த்துக் கொள்ளலாம். மேலும் அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்திலும் விவரம் கிடைக்கும்.

தங்கள் பெயா் வாக்காளா் பட்டியலில் இல்லை எனத் தெரிய வந்தால், அதற்குரிய படிவத்தை அளித்து சோ்ந்து கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா்கள் கி.அரிதாஸ், அம்பாயிரநாதன் (தேசிய நெடுஞ்சாலை), பயிற்சி உதவி ஆட்சியா் இரா. வெங்கடேசுவரன், நகராட்சி ஆணையா் எம்.ஆா்.வசந்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com