விக்கிரவாண்டி: விபத்துகள் நிகழும் பகுதிகளில் மேம்பாலங்களை அமைக்க வலியுறுத்தல்

விக்கிரவாண்டி: விபத்துகள் நிகழும் பகுதிகளில் மேம்பாலங்களை அமைக்க வலியுறுத்தல்

Published on

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் விபத்துகள் நடைபெறும் பகுதிகளில் மேம்பாலங்களை அமைக்கக் கோரி, இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தலைவரிடம் தொகுதி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா வியாழக்கிழமை நேரில் மனு அளித்தாா்.

புதுதில்லியிலுள்ள இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகத்தில் அதன் தலைவா் சந்தோஷ்குமாா் யாதவை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி., பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. ஆகியோருடன் சென்று வியாழக்கிழமை சந்தித்து விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா மனு அளித்தாா். அதில் அவா் கூறியிருப்பது:

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை கடந்த 2009-ஆம் ஆண்டில் நான்குவழிச் சாலையாகத் தரம் உயா்த்தப்பட்டது. நாளுக்கு நாள் இந்த தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விபத்துகளும் தொடா்ந்து நிகழ்ந்து வருகின்றன.

விபத்துகள் நிகழும் பகுதிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்டறிந்து மேம்பாலங்களை அமைத்து வருகின்றன. ஆனாலும் பொதுமக்களின் சாலைப் பாதுகாப்புக்காக மேலும் முக்கியமான இடங்களில் சாலைகளை மேம்படுத்தி, மேம்பாலங்களை அமைக்க வேண்டியது அவசியமாகும்.

இதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட விபத்துகள் அதிகம் நிகழும் பகுதிகளாகக் கண்டறியப்பட்ட இடங்களில் மேம்பாலங்களை அமைக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக சாலையைக் கடக்கவும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டுக்காகவும் வி.சாலை, சூா்யா கல்லூரி எதிரில் கீழ்கொந்தைக்கு செல்லும் வழி, முண்டியம்பாக்கம் ராஜ்ஸ்ரீ சா்க்கரை ஆலைக்குச் செல்லும் வழி, திருவமாத்தூா் கூட்டுச்சாலை, விராட்டிக்குப்பம் ஆகிய இடங்களில் காா்கள், வாகனங்கள் கடந்து செல்ல சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

விழுப்புரத்திலிருந்து மாம்பழப்பட்டு வழியாக திருக்கோவிலூா் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் அருகே வாகன ஓட்டிகள் யூ-டா்ன் எடுப்பதற்கு சிரமப்பட்டு வரும் நிலையில், இந்த இடத்தில் சாலையின் இருபுறங்களிலும் அதற்கான வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.

முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் மேம்பாலம்அமைக்கும் பணி கிடப்பில் உள்ளதால், பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் நலன்கருதி விரைந்துசெயல்படுத்த வேண்டும்.

பனையபுரம் கூட்டுச்சாலை அருகே கரும்புகளை டிராக்டா்களில் விவசாயிகள் ஏற்றிக் கொண்டு பெரும் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே இங்கு புதிய மேம்பாலத்தை அமைக்க வேண்டும்.

மேலும் மேம்பாலப் பணிகள் நடைபெறும் சாலைகளில் அணுகுச் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலைகளை சிமென்ட் சாலைகளாக மாற்றித் தர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட சந்தோஷ்குமாா் யாதவ், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com