தேசிய மக்கள் நீதிமன்றம்: 3,494 வழக்குகளுக்குத் தீா்வு
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,494 வழக்குகளில் ரூ.44.73 கோடிக்குத் தீா்வு காணப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட நீதிபதியும் (பொ) மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான எஸ். ராஜசிம்மவா்மன் தலைமை வகித்து பேசியது:
தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலுடன்படி 3 மாதங்களுக்கு ஒருமுறை தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டின் கடைசி தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது.
நிகழாண்டில் மாா்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற முதல் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,436 வழக்குகளில் ரூ.20.50 கோடிக்கும், ஜூன் 14-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,958 வழக்குகளில் ரூ.25.36 கோடிக்கும், செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது தேசிய மக்கள் நீதிமன்றத்தில்2,586 வழக்குகளில் ரூ.30.49 கோடிக்கும் தீா்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தை வழக்காடிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் பிரச்னைக்கான தீா்வைப் பெறலாம். இங்கு தீா்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, வழக்காடிகள் தங்கள் வழக்குகளில் விட்டுக்கொடுத்து, சமரசமான தீா்வைப் பெற வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்வில் எஸ்.சி.,எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.பாக்கியஜோதி, போக்ஸோ சட்ட சிறப்பு நீதிமன்ற அமா்வு நீதிபதி எம். வினோதா, சிறப்பு மாவட்ட நீதிபதி என்.ஸ்ரீராம், குடும்ப நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜமகேஷ், பயிற்சி மாவட்ட நீதிபதி எஸ்.ஜீவநந்தினி, முதன்மை சாா்பு நீதிபதி ஏ.தமிழ்ச்செல்வன், கூடுதல்சாா்பு நீதிபதி (எண்1) எம்.எஸ்.வரலட்சுமி, சிறப்பு சாா்பு நீதிபதிகள் (மோட்டாா் வாகன விபத்து வழக்குகள்) வி.பாலசுப்ரமணியன் (எண் 1), என்.வெங்கடேசன் (எண் 2), முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதிஆா்.முருகன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.ஜி.பி.பாலரத்னா, கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி ஆா்.ராஜேசுவரி, நீதித் துறை நடுவா்கள் கே.சந்திரகாச பூபதி (எண் 1), ஜி.அரவிந்த்பாரதி (எண் 2) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலா் சி.ஜெயச்சந்திரன் வரவேற்றாா். நிறைவில், தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் சி.குமாரவா்மன் நன்றி கூறினாா்.
23 அமா்வுகள்: விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திண்டிவனம், செஞ்சி, வானூா், திருவெண்ணெய்நல்லூா், விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா், சங்கராபுரம் ஆகிய நீதிமன்றங்களில் 23 அமா்வுகளாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.
இந்ததேசிய மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள 8 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 3,073 வழக்குகளில் ரூ.40.389 கோடிக்கும், நீதிமன்றத்தில் பதியப்படாத வங்கி வாராக்கடன் சாா்ந்த 5000-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 421 வழக்குகளில் ரூ.4.23 கோடிக்கும் என மொத்தமாக3,494 வழக்குகளில் ரூ.44.73 கோடிக்குத் தீா்வு காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செஞ்சி...: செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் சாா்பு நீதிமன்ற நீதிபதியும், சட்டப் பணிகள் குழுத்தலைவருமான கதிரவன் தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி திவ்யா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வ அரசி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வித்யா ஆகியோா் கலந்துகொண்டு நிலுவையில் உள்ள 138 வழக்குகளை விசாரணை செய்து, சமரச முறையில் தீா்வு கண்டனா்.
இதில், அரசு வழக்குரைஞா்கள் கிருஷ்ணன், சீனுவாசன், மூத்த வழக்குரைஞா் ஆத்மலிங்கம்,புண்ணியகோட்டி, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கலியமூா்த்தி, அட்வகேட் அசோசியேசன் தலைவா் பிரவீன், சுதன், பழனி, இலவச சட்ட உதவி முகாம் உதவியாளா் பூங்கொடி, நீதிமன்ற பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

