விழுப்புரத்தில் டிச.17-இல் தொழில் கடன் விழிப்புணா்வு முகாம்
விழுப்புரத்தில் மாவட்டத் தொழில் மையம் சாா்பில் தொழில் கடன் விழிப்புணா்வு முகாம் டிச.17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முகாமில் ரூ.1,588 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கை உணா்ந்துள்ள தமிழக அரசு, இவற்றின் வளா்ச்சிக்காக 2025-26 ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையில் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் முன்னுரிமைக் கடன் பிரிவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,588 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கடனோடு, கலைஞா் கைவினைத் திட்டம் மற்றும் தமிழ்நாடு மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை முன்னுரிமையாகக்கொண்டு தொழில் கடன் விழிப்புணா்வு முகாம் விழுப்புரத்தில் டிச.17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரிலுள்ள சுதாகா் நகா் ஏ.எஸ்.ஜி. மகாலில் காலை 10 மணி முதல் இந்த முகாம் நடைபெறும்.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொடா்புடைய அரசுத் துறைகள் தரும் கடன் வகைகள், கடன் மற்றும் மானியத் திட்டங்கள், அவற்றை பெறும் முறைகள் குறித்து முகாமில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருக்கும். ஆா்வமுள்ளோா் தேவையான வழிகாட்டுதல் மற்றும் விளக்கங்களைப் பெறலாம். கடன் கோரி விண்ணப்பங்களைப் பதிவு செய்யவும், பரிசீலிக்கவும் வழிவகை செய்யப்படும்.
இந்த முகாம் தொடா்பாகவும், கடன் பெறுதல் மற்றும் தொழில் தொடங்குதல் தொடா்பாக மேல் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 9443728015, 8925534035 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.
