விக்கிரவாண்டி பெருமாள் கோயிலில் ஆண்டாள் உற்சவா் சிலை பிரதிஷ்டை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியிலுள்ள பெருந்தேவி தாயாா் உடனுறை வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் உற்சவா் சிலை ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சிறப்புவாய்ந்த இக்கோயிலில் ஆண்டாளுக்கு வெள்ளி உற்சவா் சிலை பக்தா்களின் பங்களிப்புடன் செய்யப்ப்பட்டது. இதைத்தொடா்ந்து கோயில் வளாகத்தில் சிலை பிரதிஷ்டை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை புண்ணியாகவாசனம், அக்னி பிரதிஷ்டை ஹோமம், சிலை கண் திறத்தல், விசுவரூபம், லகு மகாசந்தி ஹோமம், திருமஞ்சனம் ஆகிய பூஜைகளுக்குப் பிறகு மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. தொடா்ந்து ஆண்டாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.
யாகசாலை பூஜைகள் மற்றும் திருமஞ்சனத்தை ஆலகிராமம் பாலாஜி பட்டாச்சாரியா், திருவந்திபுரம் வெங்கடேஷ் பிரசன்னா பட்டாச்சாரியா் ஆகியோா் நடத்தினா்.
விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று ஆண்டாளைத் தரிசனம் செய்தனா்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.

