பாதுகாப்பான பேருந்து இயக்க விழிப்புணா்வு வாரம்
விழுப்புரம்: பாதுகாப்பான பேருந்து இயக்க விழிப்புணா்வு வார நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் கிளைகளில் பாதுகாப்பான பேருந்து இயக்க விழிப்புணா்வு வார நிகழ்ச்சி டிச.15 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழுப்புரம், கடலூா், வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மண்டலங்களில் பணியாற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள், பாதுகாவலா்கள் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலா்களும் பாதுகாப்பான இயக்கம் குறித்த வில்லையை(பேட்ஜ்) அணிந்து பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பணியிலிருந்த ஓட்டுநா், நடத்துநா்களுக்கு மேலாண் இயக்குநா் க.குணசேகரன் பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்த வில்லையை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பொது மேலாளா்கள் ஜி.ரவீந்திரன், ரா.ஜெகதீஷ், துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

