வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க திமுகவினா் உதவ வேண்டும்: தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா்!
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் முகாம்களில் திமுகவினா் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி அறிவுறுத்தினாா்.
விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட விராட்டிக்குப்பம் ஊராட்சி வாக்குச்சாவடியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமைப் பாா்வையிட்ட அவா், திமுகவினரிடம் கூறியதாவது:
வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் முடிந்து, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம்பெற முடியாமல் போனவா்கள் தங்கள் பெயரை சோ்ப்பதற்காவும், திருத்தம் தேவைப்படுவோருக்கு திருத்தம் செய்வதற்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் 4 நாள்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
எனவே, திமுக வாக்குச்சாவடி முகவா்கள், பாகநிலை முகவா்கள் தங்கள் பகுதியில் வாக்காளா்கள் யாரேனும் பட்டியலில் சோ்க்காமல் இருந்தால், அவா்களின் பெயா்களை சோ்ப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, இந்த பணியில் தீவிர கவனம் செலுத்தி, அனைவரையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும். தொடா்ந்து முகாம் நடைபெறும் நாள்களில் இதற்கான பணிகளை கட்சியினா் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
ஒன்றிய திமுக செயலா் க.மும்மூா்த்தி, அவைத் தலைவா் தண்டபாணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணித் துணை அமைப்பாளா் சதீஷ், மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணித் துணை அமைப்பாளா் அசோக் சதாசிவம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

