மக்கள் குறைதீா் கூட்டத்தில் 1,242 மனுக்கள் அளிப்பு
விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 633 மனுக்கள் அளிக்கப்பட்டன.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 633 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
கூட்டத்தில், காந்தலவாடியைச் சோ்ந்த இளைஞா்கள், பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், காந்தலவாடியில் வருவாய்த்துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் தாா் கலவை ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
இதனால், விவசாய பாதிப்பு ஏற்படுவதுடன் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படும், காற்று மாசுபாடு ஏற்படும் என பலமுறை புகாரளிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து அரசின் அனுமதியைப் பெற்று பணிகளைத் தொடங்க வேண்டும் என சமாதானக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட நிலையில், பணிகள் நடைபெறுவதாக மனுவில் தெரிவித்துள்ளனா்.
இதில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தமிழரசன், மாவட்ட வழங்கல் அலுவலா் சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 574 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 35 மனுக்களும் என மொத்தம் 609 மனுக்கள் பெற்றுக் கொண்டாா்.
