மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் மாசித் தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அங்காளம்மன் கோயில் மாசித் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுந்து அம்மனை தரிசித்தனா்.
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் மாசிப் பெருவிழா கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 27-ஆம் தேதி மயானக் கொள்ளை திருவிழாவும், மாா்ச் 2-ஆம் தேதி தீமிதி திருவிழாவும் நடைபெற்றன.
மாசிப் பெருவிழாவின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, காலையில் மூலவா் ஸ்ரீஅங்காளம்மனுக்கு பால், தயிா், தேன், இளநீா், பன்னீா், மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, அம்மன் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னா், உற்சவா் அங்காளம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் மேளதாளம் முழங்க உற்சவா் அங்காளம்மன் திருத்தேரில் எழுந்தருளினாா். மாலை 4.30 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அா்ச்சனை, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். மேலும், தங்கள் விவசாய நிலங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் கொழுக்கட்டை, சில்லறை நாணயங்கள் உள்ளிட்டவற்றை தேரின் மீதி வாரி இறைத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.
விழாவில் எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்னியூா் அ.சிவா, ச.சிவகுமாா், தரணிவேந்தன் எம்.பி., மாவட்ட ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் பழனி உள்ளிட்டோா் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனா்.
தோ்த் திருவிழாவில் விழுப்புரம், கடலூா், வேலூா், திருவண்ணாமலை, சென்னை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள், புதுவை, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பத்தா்கள் கலந்துகொண்டனா்.
வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கா்க் தலைமையில், விழுப்புரம் டி.ஐ.ஜி. திஷா மிட்டல், விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் மற்றும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் என மொத்தம் 9,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜீவானந்தம், அறங்காவலா் குழுத் தலைவா் மதியழகன் பூசாரி மற்றும் ஏழு வம்சாவளி மீனவா் குடும்பத்தைச் சோ்ந்த முறை பூசாரிகள், மேலாளா் மணி, ஆய்வாளா் சங்கீதா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.