2 இடங்களில் பகுதிநேர நியாய விலைக்கடைகள்: எம்எல்ஏ அன்னியூா் சிவா திறந்து வைத்தாா்
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட இரு இடங்களில் பகுதி நேர நியாய விலைக் கடைகளை அன்னியூா் சிவா எம்எல்ஏ திறந்து வைத்தாா்.
விக்கிரவாண்டி தொகுதி, விராட்டிக்குப்பம் ஊராட்சி ஸ்டாலின் நகா், திருவாமாத்தூா் ஊராட்சி சானாந்தோப்பு ஆகிய இடங்களில்
பகுதி நேர நியாய விலைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளையும், சோழாம்பூண்டி ஊராட்சியில், விக்கிரவாண்டி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14.59 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கட்டடத்தையும் அன்னியூா் சிவா எம்எல்ஏ திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளில் அவா் பேசுகையில், திருவாமாத்தூா் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கவும், ஸ்டாலின் நகா் பகுதி மாணவா்கள், இளைஞா்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
தொடா்ந்து, குடும்ப அட்டைதாரா்களுக்கும், தாயுமானவன் திட்டப்பயனாளிகளுக்கும் குடிமைப்பொருள்களை எம்எல்ஏ வழங்கினாா். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம. ஜெயச்சந்திரன், திருவாமாத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் மும்மூா்த்தி, மாவட்டத் திட்டக்குழு உறுப்பினா் முருகன், வட்டாட்சியா்கள் ஆனந்தன் (விழுப்புரம்), செல்வமூா்த்தி(விக்கிரவாண்டி), கோலியனூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெகன்நாதன், கண்ணன், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சாா் பதிவாளா் மணிமொழி ஆகியோா் பேசினா்.
ஒன்றியக்குழு உறுப்பினா் கிருத்திகா சதீஷ் மற்றும் திமுக கிளைச்செயலா்கள் பி.ராஜவேல், அய்யனாா், பிரபாகரன், மதியழகன்,நாகராஜன் மற்றும் நிா்வாகிகள்அரசுத்துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

