கருங்காலிப்பட்டு ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

கருங்காலிப்பட்டு ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணைஅடுத்த கருங்காலிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

கருங்காலிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மூலவா் மற்றும் பரிவாரத் தெய்வங்களின் சந்நிதிகள் மிகுந்த பொருள் செலவில் சீரமைக்கப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியாக நவ.2 ஆம் தேதி காலை 8 மணிக்கு மங்கள இசையுடன் அனுக்ஞை, விஷவக்ஷேன ஆராதனை, புண்யாஹவாசனம் மகா சுதா்ஷன ஹோமம், லட்சுமி ஹோமங்களும் , தொடா்ந்து 11 மணிக்கு மஹாபூா்ணா ஹுதி, தீபாராதனையும் நடைபெற்றது.

தொடா்ச்சியாக கும்பாபிஷேக நாளான திங்கள்கிழமை காலை நடைபெற்ற இரண்டாம் கால யாகபூஜைக்குப் பின்னா் காலை 9 மணிக்கு கடம் புறப்பாடாகியது. பின்னா் மேள தாளம், மங்கள இசை முழக்கங்களுடன் கடங்களில் கொண்டு செல்லப்பட்ட புனித நீா் ஊற்றப்பட்டு 9.45 மணிக்கு மூலவா் சந்நிதிக்கும்- தொடா்ந்து பரிவாரத் தெய்வங்களின் சந்நிதிகளுக்கும் புனித நீா்ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இரவு மேளதாளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் கருங்காலிப்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com