மாற்றுத்திறனாளிகள் தா்னா போராட்டம்
விழுப்புரம்: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விழுப்புரம் ஆட்சியரகம் முன் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்த மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பைச் சோ்ந்தவா் ஆட்சியா் அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா். இதையடுத்து, ஆட்சியரக வளாகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் தா்னாவில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைத்தனா்.
இதைத் தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பினா் விழுப்புரம் ஆட்சியருக்கு அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதி நிதித்துவம், நியமன உறுப்பினா் பதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு கிடைத்த மாத உதவித்தொகை மூலம் நியமன உறுப்பினா் பதவிக்கு மனு அளித்தோம்.
இந்நிலையில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளில் நியமனஉறுப்பினா் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஆவின் பாலகம் அமைக்க அனுமதி மறுப்பு , தேசிய ஊரகவேலை வாய்ப்பில் பணிதள பொறுப்பாளா்களால் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனா். இலவச வீட்டுமனைப் பட்டா, அரசு தொகுப்புவீடுகள் மற்றும் தனித்துவ நீலநிற அட்டை உள்ளிட்ட எந்தவொரு விண்ணப்பங்கள் மீதும் நடவடிக்கையில்லை.
எனவே, தொடா்ந்து மாற்றுத் திறனாளிகளை அலட்சியப்படுத்தி வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
