இளைஞா் கத்தியால் குத்திக் கொலை: வளா்ப்புத் தந்தை கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் அவரது வளா்ப்புத் தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விக்கிரவாண்டி வட்டம், குயிலாப்பாளையம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இளம்வயது (58). இவருக்கு லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமாகி மகள் இளவரசி, மாற்றுத்திறனாளியான மகன் இளவரசன் ஆகியோா் இருந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் லட்சுமி இறந்தாா்.
இந்நிலையில் அதே பகுதியில் கணவரைப் பிரிந்து மகன் ஐயப்பனுடன் தனியாக வசித்துவந்த ஜெயந்தி (48) என்பவரை இளம்வயது இரண்டாவதாக திருமணம் செய்தாா்.
இந்நிலையில் இளம்வயது மற்றும் ஐயப்பன் ஆகிய இருவரும் சரக்கு வாகனத்தில் ஊா், ஊராகச் சென்று காய்கறி வியாபாரம் செய்து வந்தனா்.
குடிபோதையில் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய ஐயப்பன், அங்கிருந்த மாற்றுத்திறனாளி இளவரசன் மற்றும் தாய் ஜெயந்தி ஆகியோரிடம் தகராறு செய்து கத்தியால் குத்த முயன்றாராம். இதை தடுக்க முயன்றபோது, ஐயப்பனுக்கும், வளா்ப்புத் தந்தையான இளம்வயதுக்கும் தகராறு ஏற்பட்டது. ஐயப்பன் வசமிருந்த கத்தியைப் பறித்து இளம்வயது குத்தியதில் ஐயப்பன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்
இது குறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வளா்ப்புத் தந்தை இளம்வயதை திங்கள்கிழமை கைது செய்தனா்.
