மனித உரிமை மீறல்: தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அடுத்த டி. எடப்பாளையம்
கிராமத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் (இந்திய கம்யூனிஸ்ட் சாா்பு இயக்கம்) சாா்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவெண்ணெய்நல்லூா் அடுத்த டி. எடப்பாளையம் ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில் முறைகேடுகள் நடை பெறுவதாகவும் , இது குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுக்கு புகாா் தெரிவிக்கும் நபா்கள் மற்றும் அவரது குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், ஊா் ஒதுக்கம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் 27 இஸ்லாமிய குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் ஊா் ஒதுக்கம் செய்யப்பட்டு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளது.
இந்த மனித உரிமை மீறல்களை கண்டித்தும், தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை வேண்டும், டி. எடப்பாளையம் ஊராட்சியில் நடைபெற்றுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விழுப்புரம் மாவட்ட திட்ட இயக்குநா் தணிக்கை செய்ய வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் டி.எடப்பாளையம் ஊராட்சித்தலைவா் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும், பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு உரிய பாதுகாப்புகளை வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில தலைமைக்குழு உறுப்பினா் மா.வெங்கடேசன் தலைமை வகித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச்செயலா் ஆ.சவுரிராஜன்,ஏஐடியுசி களக்குறிச்சி மாவட்டச்செயலா் என். எஸ். செல்வராஜ், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தைச் சோ்ந்த டி.கோவிந்தராஜ், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் என். நாராணன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், டி. எடப்பாளையம் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

